தமிழிசை Vs உதயநிதி முதல் ஹமாஸ் தலைவரின் கடைசி நிமிடம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

“திமுக இனியாவது மொழி அரசியலை கைவிட வேண்டும்” - தமிழிசை: திமுக இனிமேலாவது மொழி அரசியலைக் கைவிட வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “தமிழுக்கு திமுகவினர் மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர். பாஜக தமிழ்ப் பற்று இல்லாதவர்கள் என காட்ட முயற்சிக்கின்றனர். இதற்கான வெளிப்பாடுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது. ஏதாவது, ஒரு காரணம் கிடைக்குமா என முதல்வர் பார்த்துக்கொண்டு இருக்கிறார். தமிழை சொல்லி மக்களை ஏமாற்றினோம். இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். மற்றொரு மொழியைச் சொல்லி தமிழை யாரும் சிறுமைபடுத்த முடியாது. மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும்” என்றார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவறுகளை திருத்த திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டார்.

“அரசியலும் ஆன்மிகமும் கலக்காது” - தமிழிசைக்கு உதயநிதி பதில்: தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் அளிக்கும் வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே..! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப் போல் அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று தெரிவித்துள்ளார். மேலும், “திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல... ‘சரி’ வலம்” என்றும் தமிழிசைக்கு அவர் பதிலளித்துள்ளார்.

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் ஆய்வு: நெல்லையில் ஜால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்தது தொடர்பாக அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ள நிலையில், அந்த மையத்தில் சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, ஜால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களை பயிற்சி நிர்வாகி ஜலாலுதீன் பிரம்பால் தாக்கியது, அவதூறாக பேசியது, காலணியை வீசியது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி கிடையாது என்று ஆதங்கம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இதே நிலை நீடித்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை தானாக குறைந்து விடும் என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை: தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 9-ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்புக்காக அமைச்சரவை தீர்மானம்: ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.

ஒரே நாளில் 20+ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சனிக்கிழமை காலை முதல் பல்வேறு இந்திய விமான நிறுவனங்களின் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 40-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் இல்லத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்: லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். மேலும், இந்தத் தாக்குதலின்போது நெதன்யாகு வீட்டில் இல்லை என்றும், சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி காட்டிய சர்பராஸ் கான்! - நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில், இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் 462 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இன்னிங்ஸ்சில் ஒற்றை ஆளாக நியூஸிலாந்தை பந்தாடிய சர்பராஸ் கான் 195 பந்துகளில் 150 ரன்களைச் சேர்த்து அதிரடி காட்டினார்.

ஹமாஸ் தலைவர் யாஹியாவின் கடைசி நிமிட வீடியோ: ஹமாஸ் பிரிவு தலைவர் யாஹியா சின்வர் தங்கியிருந்த கட்டிடம் தாக்கப்பட்டபோது எடுத்த ட்ரோன் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. அதில் ட்ரோன் மீது மரக்கட்டை எடுத்து யாஹியா சின்வர் வீசி எறியும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், “இஸ்ரேல் வரலாற்றில் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற மோசமான தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் சின்வர். இவர் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று தோல்வியடைந்தார்” என்றார்.

“நாங்கள் அமைதி வழியையே விரும்பினோம்”- புதின்: “அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்; ஆனால் உக்ரைன் தான் எங்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்ட்து என்று” உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE