“தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை என்றால் முதல்வர் மகிழ்ச்சியடைவார்” - டிஆர்பி.ராஜா பெருமிதம்

By சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி: “தமிழகத்துக்கு எத்தனை கோடி முதலீடுகள் வந்தாலும் முதல்வருக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்றால் முதல்வர் மகிழ்ச்சி அடைவார்” என தூத்துக்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் புதிதாக கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட்ட உள்ள டைடல் நியோ பூங்கா கட்டிடத்தை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கரோனா காலகட்டத்தில் பணியிடத்தில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டிய காலகட்டத்துக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் பெற்றோர்களுடன் இருந்து பணி செய்யும் நோக்கில் தமிழகம் முழுவதும் மினி டைடல் பூங்கா திட்டத்தை 2022-23-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தூத்துக்குடியில் டைடல் பூங்கா ரூ.30 கோடி மதிப்பில் 63 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. இங்கு, 11 நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. விரைவில் முழுமையடைந்து நிறுவனத்துக்கு ஒதுக்கப்படும். இதனால் தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வரும். தூத்துக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட டைடல் பூங்காவை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். தென்தமிழகத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் பல முக்கிய திட்டங்களை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

இதில் ஒன்று தான் வின்ஸ்பாட் கார் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மிகப்பெரிய வளர்ச்சி அடையும். மேலும், மிக பெரிய முக்கிய திட்டம் ஒன்று தூத்துக்குடிக்கு வரவுள்ளது. மேலும், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே தான் போட்டி உள்ளது. ஆனால் தமிழகத்துக்கு போட்டி வெளிநாடுகள் தான். அந்நிய முதலீடுகள் தமிழகத்தில் படிப்படியாக வரும். ரூ.10 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ள நிறுவனங்களின் பணிகள் பின்பற்றி, மாதம் ஒருமுறை முதல்வருக்கு அறிக்கை கொடுத்து வருகிறோம். அமெரிக்காவில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலீடுகள் 100 சதவீதம் வந்து சேரும். யார் முதலீடுகளை கொண்டு வருவார்களோ அவர்களுக்கு மட்டும் தான் கையெழுத்திட்டுள்ளோம். எது வேலைவாய்ப்புகளாக உருவாகுமோ அதற்கு மட்டும் தான் கையெழுத்திட்டுள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சியில் சொல்வதை நிச்சயமாக செய்வோம். தமிழகத்துக்கு எத்தனை கோடி முதலீடுகள் வந்தாலும் முதல்வருக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்றால் முதல்வர் மகிழ்ச்சி அடைவார்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, மீன்வளக்கல்லூரிக்கு எதிர்புறம், முள்ளக்காடு கடற்கரை பகுதியில் புதிதாக தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கு போதுமான அரசு நிலம் உள்ளதா என அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, பெ.கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE