4 ஆயிரம் ஆசிரியர் நிரந்தர பணியிடங்களை நிரப்ப முயற்சி: அமைச்சர் கோவி.செழியன் உறுதி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: 4 ஆயிரத்திற்கு அதிகமான ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் 2-வது நாளாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்து, 2021-22-ம் கல்வியாண்டியில் பயின்ற 768 மாணவர்கள் மற்றும் 719 மாணவிகள் என மொத்தம் 1487 பேருக்கு பட்டம் வழங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் கூறியது, “வரலாற்றுப் புகழுடைய இந்தக் கல்லூரி தமிழகத்தில் உள்ள பிரதானமான 5 கல்லூரிகளில் ஒன்றாகும்.

பல்கலைக்கழகத்திற்கு இணையாகத் தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருவது பெருமைக்குரியதாகும். பாரதிதாசன் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் பணி நேரக் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டுள்ள போராட்டம் தொடர்பாக, துறையின் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் கலந்து பேசி, போராட்டத்தில் களத்தில் இருந்தவர்களிடம், தலைமை செயலகத்தில் இருந்து பல முறை தொடர்பு கொண்டு, அதில் சுமூக சூழ்நிலை உருவாக்குகின்ற முயற்சியில், 18-ம் தேதி நள்ளிரவு வரை மேற்கொண்டோம்.

அக்.19-ம் தேதி காலையில் இருந்து நிதித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை நிறைவேற்றும் முகமாக இந்தப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு சுமூகமான முடிவு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

அநேக கல்லூரிகளில் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியப்பிரச்சினை இருந்து வருகிறது. இதனை விரைவில் களைவதற்கு முதல்வர் வலியுறுத்தி உள்ளதையொட்டி, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பதால், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும், 4 ஆயிரத்திற்கு அதிகமான ஆசிரியர்களுக்கான நிரந்தர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கை திணிக்கப்படாமலேயே அகில இந்திய அளவில் தமிழகம் 54 சதவீதம் பெற்று உயர்கல்வியில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆனால் மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை 2030-ம் ஆண்டு 50 சதவீதத்தை தொடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழகம் தற்போது புதிய கல்விக் கொள்கை இல்லாமலேயே தற்போது 54 சதவீதத்தை எட்டி உள்ளது.

எனவே, எதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை எல்லாம் மறுக்க வேண்டும் என்பது தமிழக முதல்வருக்கு தெரியும்”என அவர் தெரிவித்தார். கல்லூரி முதல்வர் அ.மாதவி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரராஜன், முன்னாள் எம்பி.,ராமலிங்கம், துணை மேயர் தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE