செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நெற்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் புதிதாக கல்குவாரி தொடங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூட்டது என வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் நெற்குணம் ஊராட்சியில் வயலூர், புத்தகமங்கலம், புலியனை, தூதுவிலம்பட்டு உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 2,000 ஏக்கரில் விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பகுதியில் அமைந்துள்ள வயலூர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் புதிதாக கல்குவாரி தொடங்க தடை விதிக்கக் கோரியும் நெற்குணம் ஊராட்சி மக்கள் அண்மையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் நெற்குணம் பேருந்து நிலையம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து நெற்குணம் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், “விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் எங்கள் கிராமத்தில் தற்போது கல்குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி வழங்கினால் கல்குவாரியால் மாசு, சுகாதார சீர்கேடு அடையும், நிலத்தடி நீர் பாதிக்கும், விவசாயம் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். குவாரிகளில் அதிக சத்தமாக வெடி வெடிக்கும் போது வீடுகளில் விரிசல் ஏற்படும்.
» தேவர் ஜெயந்திக்கு முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு
» ‘ரேஷனில் தரமில்லை, சாலை சரியில்லை...’ - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனமும், மதுரை திமுக சலசலப்பும்!
இதனால் இந்த கல்குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும். இது குறித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தி இருக்கிறோம்” என்றனர்.