கோவை: கோவை மாநகர காவல்துறையும், கோவை மாவட்ட புகையிலை பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து போதைப் பொருள் இல்லாத கோவை என்ற தலைப்பில் மாரத்தான் நிகழ்ச்சியை இன்று நடத்தின.
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் பாலுசாமி, புகையிலை பொருள் தடுப்புப் பிரிவு மாவட்ட ஆலோசகர் சரண்யாதேவி ஆகியோருடன் ஆயிரக்கணக்கான போலீஸார் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.
முன்னதாக, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டமானது 7 கி.மீ., 5 கி.மீ., மற்றும் 3 கி.மீ. தூரம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.