6 முருகன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: ஆதீனம் -அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 6 முருகன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா பயணம் செல்லும் புதிய பேருந்தை, திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் சன்னிதியில் இருந்து ஆதீனம் - அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற 6 முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் ஆன்மிக சுற்றுலாவுக்கு அரசு போக்கு வரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணமானது இன்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயில் சன்னிதியில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

6 முருகன் கோயில்களின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட புதிய பேருந்தை, இன்று காலை திருப்பனந்தாள் காசி திருமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். வழிகாட்டியுடன் செல்லும், இந்தப் பேருந்தில் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் 41 பயணிகள் தொப்பி, பூச்செண்டு மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்தப் பேருந்திற்குத் திருஷ்டி கழிக்கப்பட்டு, பேருந்தின் படியில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி அதன்பிறகு பயணிகள் ஏறி அமர்ந்தனர். இந்தப் பேருந்து கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் (காலை 7.30 மணி), நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் சுவாமி கோயில் (காலை 9 மணி), பொரவாச்சேரி கந்தசுவாமி கோயில் (காலை 10.15 மணி), எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் (நண்பகல் 12 மணி), சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் (பிற்பகல் 3.45 மணி), திருஏரகரம் கந்தசுவாமி கோயில் (மாலை 5.30 மணி) ஆகிய கோயில்களுக்குச் சென்று அங்கெல்லாம் தரிசனம் முடித்து மாலை 6.30 மணிக்கு மீண்டும் கும்பகோணம் வந்தடையும்.

இன்றைய ஆன்மிக சுற்றுலா தொடக்க நிகழ்ச்சியில், எம்பி-க்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ஆர்.சுதா, எம்எல்ஏ-வான துரை.சந்திரசேகரன், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி, வணிக மேலாளர் ராஜ்மோகன், முன்னாள் எம்பி-யான செ.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; திருவிழாக் காலங்களில் திருக்கோயில்களுக்குச் செல்வதற்கு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பரீட்ச்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட இந்தச் சுற்றுப் பயணங்கள் வெற்றிகரமாக உள்ளது. எதிர்காலத்தில் சபரிமலை போன்ற இடங்களுக்கும் இதுபோல் ஆன்மிக சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE