வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாட்டை சரிசெய்த பிறகே கருத்துகேட்பு கூட்டம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: மாநில வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்த பிறகே பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மீனவ செயற்பாட்டாளர்கள் ஜேசு ரத்தினம் மற்றும் சரவணன் ஆகியோர் தேசியபசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நாஸ்காம் உதவியுடன் வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதில் மீனவர்கள் குடியிருப்புகள், மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம், மீன்கள் பிடிபடும் இடம், மீனவ கிராமங்களின் பெயர்கள், எல்லைகள் விடுபட்டுள்ளன. தவறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளது.

கடற்கரை ஒழுங்காற்று மண்டலஅறிவிக்கை-2019 விதிகளின்படி வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படவில்லை. எனவே கருத்துகேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வரைவு திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இதைவிசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் முழுமையற்று இருப்பதால் கருத்துகேட்புக் கூட்டம் நடத்தக்கூடாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால உத் தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக கடற்கரை பகுதிகளில் எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அந்தப் பகுதிகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் மற்றும் மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளில் உள்ள சூழல் கூருணர்வுமிக்க பகுதிகளை வரையறை செய்ய தமிழக கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் நாஸ்காம் இணைந்து களஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட திருத்தங்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்தும் பெறப்பட்ட தரவுகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் வரைவு அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும்.இதை தமிழக கடற்கரை மண்டலமேலாண்மை ஆணைய உறுப்பினர்செயலர் உறுதி செய்ய வேண்டும்.

மனுதாரர் எழுப்பிய குறைபாடுகள், மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகள்மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதியின் கூறுகள் அனைத்தும் வரைவு திட்டத்தில் சேர்க்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே அத்திட்டத்தை வெளியிட வேண்டும்.

இந்த வரைவு திட்டத்தை அனைத்துத் தரப்பினரும் ஆராய்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க உரிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும். திருத்தங்கள் குறித்து கருத்துகளைப் பெற்ற பின்னர் உரிய சட்டவிதிகளின்படி பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை அறிவிக்கலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE