வைகை அணை அருகே வைரஸ் காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு: சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என குற்றச்சாட்டு

By பி.டி.ரவிச்சந்திரன்

தேனி: வைகை அணை அருகே வைரஸ் காய்ச்சலால் பத்து வயது சிறுவன் உயிரிழந்தார். தரமற்ற குடிநீர் விநியோகமே இதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் வைகை அணை அருகே குள்ளப்புரம் ஊராட்சி சங்கரமூர்த்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் மோகித்குமார் (10). அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த சிறுவன் மோகித்குமாரை சிகிச்சைக்காக கடந்த திங்கள் கிழமை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சிறுவன் மோகித்குமார் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் செய்ததாலேயே சிறுவன் மோகித்குமார் உயிரிழந்ததாகவும், இதேபோல மேலும் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்கள் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி அனைவரையும் பரிசோதிக்கவேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE