மதுரையில் கைவிடப்பட்ட குவாரி பள்ளங்கள் பாதுகாக்கப்படுமா? - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு 

By கி.மகாராஜன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி பள்ளங்களை பாதுகாக்கக் கோரிய வழக்கில் கனிமவளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 'மதுரை மாவட்டத்தில் குவாரி தொழில் 2024-ல் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் குவாரி பள்ளங்கள் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டது. இதனால் இந்த குவாரி பள்ளங்களில் பலர் தவறி விழுந்து உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் யா.ஒத்தக்கடை, இலங்கிப்பட்டியில் கைவிடப்பட்ட குவாரிகளில் இருவர் உயிரிழந்தனர்.

கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சருகு வலையப்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி பகுதிகளிலும் குவாரி பள்ளங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் உள்ளன. கீழவளவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட குவாரிகளில் 2023 வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மதுரை மாவட்டத்தில் கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சருகு வலையப்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கைவிடப்பட்ட குவாரிகளை கனிம வளச் சட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும், உயிரிழப்புகளுக்கு காரணமான சட்டவிரோத குவாரிகளை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு வழக்கு நிலுவையில் இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ''கைவிடப்பட்ட குவாரி பள்ளங்களில் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில், நிலுவையில் இருக்கும் வழக்கை காரணம் காட்டுவதை ஏற்க இயலாது. மனு தொடர்பாக கனிமவளத் துறையின் முதன்மைச் செயலர், ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்'' என் உத்தரவிட்டு விசாரணையை நவ. 15-க்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE