திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - மக்கள் மறியலால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்

By இ.ஜெகநாதன்

சிவகங்கைஉ: திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி பழையூர் ஊருணி பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவில்லை. இதையடுத்து இன்று வட்டாட்சியர் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் புல்வாய்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் சில நாட்களில் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE