கன்னியாகுமரி உன்னங்குளத்தில் அமைக்கப்பட்ட நுண்ணுயிர் குப்பைக் கிடங்கு: பொதுமக்கள் எதிர்ப்பால் இடமாற்றம்

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி உன்னங்குளம் கிராமத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையோரம் நுண்ணுயிர் குப்பை கிடங்கு அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்றது. ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட உன்னங்குளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குருந்தன்கோடு - ராஜாக்கமங்கலம் நெடுஞ்சாலையில் இருந்து குறுக்காக செல்லும் நுழைவு வாயிலுடன் கூடிய கிராமத்து சாலை வழியாக மக்கள் இந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கிராமத்தில் ஆற்றங்கரை ஓரமாக மூன்று சாலைகள் சந்திக்கும் புறம்போக்கு நிலத்தில் கிராம திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கழிவு குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் பிரித்தெடுக்கும் வகையில் குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக அவ்விடத்தை சுற்றி கம்பிகள் அமைத்து மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், இன்று உன்னங்குளம் கிராம மக்கள் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊரின் நுழைவுப் பகுதியில் செல்லும் சாலை அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டினால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் என மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆகவே, இந்த நுண்ணுயிர் குப்பை கிடங்கை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் குதிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உன்னங்குளம் ஊர் தலைவர் மனோகரன் தலைமையில் இன்று வெள்ளிச்சந்தை ஊராட்சி தலைவர் தாமஸ் கென்னடியை சந்தித்து மக்கள் புகார் அளித்தனர். அப்போது, உன்னங்குளம் பராசக்தி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல விழாக்கள், மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுவதால் அங்குள்ள இசக்கியம்மன் கோயிலில் இருந்து பராசக்தி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால் குட ஊர்வலம் போன்ற பல நேர்த்தி கடன்களை செலுத்த அவ்வழியாக செல்வர்.

இதுபோன்ற விழாக்காலங்களில் குப்பை கிடங்கால் துர்நாற்றம் வீசி மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ஊர் தலைவர் மனோகரன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, உன்னங்குளத்தில் குப்பை கிடங்கிற்கான கட்டுமானப் பணி நடந்த இடத்தை இன்று ஊராட்சி அதிகாரிகள், வெள்ளிச்சந்தை ஊராட்சி தலைவர் தாமஸ் கென்னடி ஆகியோர் பார்வையிட்டனர்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கிருந்து குப்பை கிடங்கு கட்டுமானம் அகற்றப்பட்டு அருகே 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்து குப்பை கிடங்கிற்கான கட்டுமான மேற்கூரைகள், கம்பிகள் அகற்றப்பட்டன. மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குப்பை கிடங்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE