விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு: 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு பாண்டியன் நகரில் உள்ள தனியார் அரங்கில் மாநிலத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அபராஜீதன் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். வரவேற்புக்குழு தலைவர் வைரவன் வரவேற்புறையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி மாநாட்டை தொடங்கி வைத்து உரைற்றினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செல்வக்குமார், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாயமலை, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வாசுகி, தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கங்காதரன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான் வேலை அறிக்கையினையும், நிதிநிலை அறிக்கையினை மாநில பொருளாளர் சுப்புக்காளை தாக்கல் செய்தனர்.

மாநில துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்களால் முன் மொழியப்பட்ட தீர்மானங்களின் மீது நீண்ட விவாதம் நடைபெற்று, கரவொலி மூலம் ஒப்புதல் வழங்கி 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலை அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையின் மீது மாநில மாநாடு பிரதிநிதிகளால் விவாதம் செய்யப்பட்டது. மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE