தஞ்சாவூர்: திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய சரகத்திற்குட்ப்பட்ட பழைய பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2023, 2024ம் ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போனதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில், மேற்கு காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையில், எஸ்ஐ தேசியன், எஸ்எஸ்ஐ சம்பந்தம் மற்றும் போலீஸார் நவீன தொழில்நுட்பம் மூலம், திருடுபோன செல்போன்களை கண்டறிந்து, அதில் 100 செல்போன்களை திருடர்களிடம் இருந்து மீட்டு இன்று அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டிஎஸ்பி சோமசுந்தரம், மீட்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்து, இந்த செல்போன்களை கண்டுபிடித்த போலீஸாருக்கு நினைவுப் பரிசு மற்றும் வெகுமதியையும் வழங்கினார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: "கடந்த 2 ஆண்டுகளாக காணாமல் போன இன்னும் பெரும்பாலான செல்போன்கள் மும்பை, ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருப்பது கண்டயறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு, அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவற்றை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்போம்" என போலீஸார் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE