புதுச்சேரி: மழை பெய்தால் சேறும் சகதியாகவும், வெயில் அடித்தால் புழுதி மயமாகவும் புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கிருந்து புறப்படும் பேருந்துகளால் தூசி பறந்து மக்கள் அவதி அடைகின்றனர். இதனால் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் மக்களைப் பாதிக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தை முழுவதும் இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 29 கோடியில் வணிகவளாகத்துடன் கட்டும் பணியை கடந்த 2023 ஜூனில் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, பேருந்து நிலைய மைய பகுதியில் இரும்புத் தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கு பேருந்து நிலைய பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பேருந்து நிலையத்தை முழுமையாக காலி செய்து கொடுத்தால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க முடியும் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் வந்ததால் பணிகள் நடக்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கடந்த ஜூன் 16-ல் புதிய பேருந்து நிலையத்தை ஏஎஃப்டி திடலுக்கு தற்காலிகமாக மாற்றி விட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தொடர முடிவு எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது.
ஆனால், தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மழை பெய்தாலே தற்காலிக பேருந்து நிலையம் முழுமையுமே சேறும் சகதியும் மாறி மக்களை படுத்தி எடுக்கிறது. நகராட்சி தரப்பிலிருந்து சகதி மீது மணலைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர். மழை விட்டதும் அந்த மணல் காய்ந்து வெயிலில் தூசி பறக்கத் தொடங்கி விடுகிறது.
» சிவகாசி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கல்: 3 குடோன்களுக்கு சீல்
» ராமேசுவரம் திருப்புல்லாணி அரசுப் பள்ளியில் கல்வெட்டுகள் அறிவோம் பயிலரங்கம்: மாணவர்கள் பங்கேற்பு
அண்மையில் பெய்த மழையால் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாகி மக்கள் அவதியடைந்தனர். தற்போது வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்து டயர்களில் மணல் ஒட்டி புதுச்சேரி - கடலூர் சாலையெங்கும் மணலும், தூசியும் பறக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் கிடக்கும் மணலில் சறுக்கியும் விழுந்து விபத்து ஏற்படுகின்றது.
தூசி பறப்பதால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளையும் மக்கள் எதிர்க்கொண்டு வருகின்றனர். தற்காலிக பேருந்து நிலையம் தானே என ஏனோ தானோ பணிகளைச் செய்யாமல் தூசி, மற்றும் சகதி பிரச்சினைக்கு நகராட்சியினர் ஆக்கபூர்வமான தீர்வைச் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.