மேட்டூர் அருகே  கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குழாய்களை மாற்றும் பணி தீவிரம் 

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அருகே காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சேதமடைந்த, பலவீனமான குழாயை அகற்றிவிட்டு புதிய ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் 2004-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டூர் காவிரி ஆற்றில் குடிநீரை எடுத்து சுத்திகரித்து மேச்சேரி, பி.என்.பட்டி, வீரக்கல்புதூர் வழியாக காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தினசரி 2.28 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 900 ஊரக குடியிருப்புகளில் சுமார் 6.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், ராட்சத குழாய்கள் அனைத்தும் சேதமடைந்து, பலவீனமாக உள்ளதால் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் நீர் வீணாகி சாலையில் வழிந்தோடியது. அப்படி கடந்த சில மாதங்களில் 10 முறைக்கும் மேல் குழாய் உடைப்பு ஏற்பட்டது. எனவே, கூட்டுக் குடிநீர் திட்ட குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் செல்லும் பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், மேட்டூர் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து காடையாம்பட்டி வரை சேதமடைந்த, பலவீனமாக உள்ள பகுதிகளில் புதியதாக குழாய், வால்வு உள்ளிட்டவற்றை மாற்றுவது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அரசு அனுமதியுடன் நிதி ஒதுக்கப்பட்டு, புதிதாக ராட்சத குழாயை மாற்றுவதற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது, குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ''காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைத்து 20 ஆண்டுகள் கடந்த நிலையில், பலவீனமாக உள்ள குழாய்களைக் கண்டறிந்து மாற்றும் பணி நடக்கிறது. 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய் அமைக்கும் பணியும், வால்வு மாற்றும் பணியும் நடந்து வருகிறது. தற்போது வரை, 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விடும். மேட்டூர் அனல் மின் நிலையம், சிறு, குறு தொழிற்பேட்டை, தேசிய நெடுஞ்சாலை வழியாக குடிநீர் குழாய் செல்வதால், உரிய அனுமதி பெற்று குழாய் அமைக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE