பொன்னேரி: வடகிழக்கு பருவமழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பெரியபாளையம் அருகே தரைப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான ஆரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பெரியபாளையம் அருகே ஆரணி அடுத்த அஞ்சாத்தம்மன் கோயில் பேருந்து பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
தரைப்பாலத்தின் மேல் சுமார் 3 அடி உயரத்துக்கு மேல் நீர் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 கி. மீ., தூரம் சுற்றி மாற்றுப் பாதையில் பெரியபாளையம் சென்று அங்கிருந்து ஆரணி, பொன்னேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
» அக்.24 வரை பயண அட்டைகள் விற்பனை: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்
» திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த அறங்காவலர் உள்ளிட்டோருக்கு நீதிபதி கண்டனம்
மேலும், தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளிகள் மற்றும் கலலூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அஞ்சாத்தம்மன் கோயில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை துரிதமாக மேற்கொண்டு முடித்து போக்குவரத்து பாதிப்பை தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.