ராமேசுவரம் திருப்புல்லாணி அரசுப் பள்ளியில் கல்வெட்டுகள் அறிவோம் பயிலரங்கம்: மாணவர்கள் பங்கேற்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பழந்தமிழ் கல்வெட்டுகள் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பயிலரங்கில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ச.ரோகித் வரவேற்றார். பயிலரங்கத்திற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் பேசியதாவது, ''மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலத்திலேயே தமிழ் மொழியை நன்றாகப் படிக்கவும், எழுதவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் வழியாகத் தான் தமிழ் மொழியின் தொன்மையான கல்வெட்டுகளின் சொற்களை படிக்க இயலும். அதற்கான ஒரு நல்வாய்ப்பாக இப்பயிலரங்கம் அமைந்துள்ளது'' என்றார்.

ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரான வே.ராஜகுரு, தமிழ்நாட்டின் வரலாறு எழுத உதவும் அறிவியல்பூர்வமான சான்றாக உள்ள, தமிழி, வட்டெழுத்து, தமிழ், கிரந்தம், அரபி, தேவநாகரி, தெலுங்கு, கன்னடம் ஆகிய கல்வெட்டுகள் பற்றி மாணவர்களுக்கு படங்கள் மூலம் விளக்கினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ரா.மதுஜாஸ்ரீ நன்றி கூறினார்.

கல்வெட்டு பயிலரங்கத்தில் உரையாற்றும் தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன்

அண்மையில் ராஜராஜசோழன் பெயர் பொறித்த காசுகளை கண்டெடுத்த மாணவிகள் மணிமேகலை, கனிஷ்காஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகியோரைப் பாராட்டி இன்றைய பயிலரங்கில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழி, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளையும், அதில் எழுதப்பட்டிருந்த கல்வெட்டு எழுத்துகளையும் படித்து 2000 ஆண்டுகளில் படிப்படியாய் தமிழ் எழுத்துகள் அடைந்த மாற்றங்களைக் கண்டு மாணவர்கள் அதிசயித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE