திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த அறங்காவலர் உள்ளிட்டோருக்கு நீதிபதி கண்டனம்

By KU BUREAU

சென்னை: திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோஎடுத்த பெண் அறங்காவலர் உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் அறங்காவலரான வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘இந்துக்களின் புனிதமான கோயில் வளாகத்தில் பெண் அறங்காவலரே 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்திருப்பது பக்தர்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பெண் அறங்காவலரான வளர்மதி உள்ளிட்ட பெண்கள் நடனமாடியும், சுவாமி படத்துக்குக்கீழ் இருக்கையைப் போட்டுக்கொண்டு நடிகர் வடிவேலு நடித்துள்ள நகைச்சுவைக் காட்சியைப் போல வசனம் பேசி ரீல்ஸ் வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் பயபக்தியுடன் வேப்பிலை கட்டி வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் நிலையில் அங்கிருக்கும் சுவாமி மீது பயம் இருக்க வேண்டாமா? கோயிலுக்குள்ளேயே ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சுவாமிக்கு என்ன மரியாதை உள்ளது? இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என கண்டனம் தெரிவித்தார். பின்னர் இந்த விவகாரத்தி்ல் சம்பந்தப்பட்டுள்ள பெண் அறங்காவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து, அக்.29-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவி்ட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE