மதுரை: ‘நல்ல குணமாக பேசுகிறீர்கள், உங்களை மாதிரி அதிகாரிகள் தான் வேண்டும்’ என மதுரையில் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியை முதியவர் ஒருவர் பாராட்டினார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை பாதிப்பு குறித்த ஆய்வுக்கென சிறப்பு கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரியாக அருண் தம்புராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளர். மதுரை மாநகர் உட்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பாதிப்பு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை குறித்து அவர் ஆய்வு செய்கிறார்.
இதன்படி, மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதியில் அருண் தம்புராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று (அக்.17) காலை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு அவர் அப்பகுதியில் இருந்து காரில் புறப்பட்டபோது, திடீரென அங்கு வந்த முதியவர் ஒருவர், ஐஏஎஸ் அதிகாரியின் காரை மறித்தார். உடனே அவரது கார் நிறுத்தப்பட்டது.
அந்த முதியவரிடம், என்ன விவரம் சொல்லுங்கள் என, கேட்டுள்ளார் அருண் தம்புராஜ். அதற்கு பதிலளித்த முதியவர், ‘எங்கள் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், கண்டு கொள்வதே இல்லை. ஆனால், நீங்கள் காரைவிட்டு இறங்கி நின்று சிரித்த முகத்தோடு பேசுகிறீர்கள். இது ரொம்ப மகிழ்ச்சி. நல்ல அதிகாரியான நீங்கள் இன்னும் மேலே வருவீர்கள். உங்களை போன்று நல்ல குணமாக பேசும் அதிகாரிகள் தான் வேண்டும்’ என, மதுரை மொழியில் பாராட்டினர். அப்போது, சிறப்பு அதிகாரி அருண் தம்புராஜூம் முதியோரின் கோரிக்கையை கனிவுடன் சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு அவரை பாராட்டிவிட்டுச் சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிக்கும் வலைத்தளத்தில் பலர் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.
» நவராத்திரி பூஜைக்கு பின்பு திருவனந்தபுரத்தில் இருந்து குமரி திரும்பிய சுவாமி விக்கிரகங்கள்!
» உதயநிதி Vs இபிஎஸ் முதல் இந்திய அணி ‘மோசமான’ சாதனை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்