“வேலை ஒழுங்காக நடக்க வேண்டும்” - நெடுஞ்சாலைத் துறையை எச்சரித்த செங்கை ஆட்சியர்

By பெ.ஜேம்ஸ் குமார்

பல்லாவரம்: “வந்தோம், பார்த்தோம் என இருக்கக்கூடாது, வேலை நடக்க வேண்டும்” என நெடுஞ்சாலைத் துறையினரை செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.

தாம்பரம் மாநகராட்சி பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக வெளியேறி அடையாறு ஆற்றில் கலக்கும். மழை அதிகமாக பெய்தால் இப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும். ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்சினை தொடர்வதால் கால்வாய் கட்டி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் தேங்காத வகையில் அடையாறு ஆற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கவுல் பஜார் ஊராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து ஆண்டாள் வழியாக மூவர் நகர் வரை 2 ஆயிரம் அடி தூரத்திற்கு ரூ.3 கோடி ரூபாய் செலவில் கால்வாய் கட்டும் பணி கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பணியில் பொழிச்சலூர் பிரதான சாலையில் இடையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் அரை குறையாக விட்டனர்.

பின்னர் இரண்டாம் கட்டமாக மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை மூன்றாயிரம் அடி தூரத்திற்கு ரூ.4.15 கோடி செலவில் கால்வாய் கட்டி அடையாறு ஆறு வரை எடுத்து செல்லாமல் கவுல்பஜார் காவல் உதவி மையத்தின் அருகே நிறுத்தி விட்டனர். யார் செய்வது என ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு கருத்து வேறுபாடு காரணமாக பணி தொடர்ந்து நடைபெறவில்லை.

இதனால் கால்வாய் அமைத்தும் பயனில்லாமல் போனது. குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கால்வாய் பணியை அமைச்சர் தா.மோ அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின் கம்பங்களை அகற்றுவதில் மெத்தனம் காட்டும் மின் வாரியத்தின் அலட்சியம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது, “பாதி பாதியாக நிற்கும் கால்வாயை எப்போது இணைப்பீர்கள்” என ஆட்சியர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு மாதத்தில் முடித்து விடுவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, “வந்தோம், பார்த்தோம் என இருக்கக்கூடாது. வேலை நடக்க வேண்டும்” என எச்சரித்த ஆட்சியர், கவுல்பஜார் காவல் உதவி மையத்தோடு நிற்கும் கால்வாயை அடையாறு ஆறு வரை நீட்டிக்க உடனடியாக திட்ட அறிக்கை தயார் செய்ய புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சர்வீஸ் சாலையை அளவீடு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வருவாய் துறையினருக்கும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE