திருப்பூர் வெடி விபத்தில் 4 பேர் பலி: உரிய இழப்பீடு கோரி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: வீட்டில் சட்டவிரோதமாக நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தி, திருப்பூரில் இன்று எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூரில் முறைகேடாக வீட்டில் நாட்டுவெடி தயாரித்தபோது, ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் கடந்த 8ம் தேதி உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன. இது தொடர்பாக உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீட்டை வழங்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் வடக்கு தொகுதி தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். இதில், கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் பேசியதாவது: "திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன், தனது மைத்துனர் சரவணக்குமாருக்காக நாட்டுவெடிகளை வீட்டில் முறைகேடாக தயாரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில், சுள்ளான் (எ) குமார், 9 மாத பெண் குழந்தை ஆலியா சிரின், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி விஜயா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர் தம்பதியரின் மகள் நிரஞ்சனா என்ற 6 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், 6 குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த கிலோ கணக்கிலான வெடிபொருள் வெடித்ததால் சுற்றியுள்ள வீடுகள் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில், உரியவர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித இழப்பீட்டையும் இதுவரை வழங்கவில்லை. தொடர்ந்து காலதாமதம் செய்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அபூபக்கர் சித்திக் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பாண்டியன் நகரில் வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE