சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. 86-வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்

By க. ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-வது பட்டமளிப்பு விழா இன்று பட்டமளிப்பு விழா மண்டபமான சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ - மாணவியருக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் நேரடியாக 789 மாணவ - மாணவியருக்கு நேரடியாக பட்டங்களையும், பல்வேறு பாடங்களில் முதன்மையாக தேர்ச்சி பெற்ற 38 மாணவ - மாணவியருக்கு பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். மேலும், 728 பேருக்கு பிஹெச்டி, எம்ஃபில் பட்டங்களும் வழங்கப்பட்டது. 38 பேருக்கு தங்கப் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டது.

நேரடி சேர்க்கை மூலம் பயின்ற மாணவர்கள் 789 பேருக்கும், தொலைதூரக்கல்வி மையம் மூலம் படித்த மாணவர்கள் 35,593 பேருக்கும் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தமாக 36,382 மாணவ - மாணவியர் பட்டங்களை பெற்றனர். இதில், முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுசாமி முனைவர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணை வேந்தருமான கோவி.செழியன் கலந்து கொண்டார். டெல்லி இந்திய அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் முதன்மை ஆலோசகரும் சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவருமான மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

இவ்விழாவில், பல்கலை. பதிவாளர் பிரகாஷ், சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மி ராணி, கள்ளக்குறிச்சி எம்பி மலையப்பன், காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எஸ்.குமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் சீனுவாசன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE