7,000 குடிநீர் இணைப்புகள் கணக்கில் வரவில்லை: வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் அதிர்ச்சி தகவல்

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் 7 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கணக்கில் வராமல் இருக்கிறது என்று மாமன்ற கூட்டத்தில் ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் தமிழக துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தீர்மானம் கொண்டுவந்தார். கூட்டம் தொடங்கியதும் நடந்த விவாதம் பின்வருமாறு:- வீனஸ் நரேந்திரன்: “புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்பட்டு வீணாக இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்த ஆணையர்: “தமிழ்நாடு முழுவதும் கடை வாடகை தொடர்பாக குழு அமைத்துள்ளனர். இதன் முடிவு வந்த பிறகே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்” என்றார். துணை மேயர்: “பாதாள சாக்கடை பணிகள் 5 ஆண்டுகளாக நடக்கிறது. சாலை அமைக்க டெண்டர் விட்டும் பணிகள் தொடங்கவில்லை. இ.ஓ.டி இருந்தால்தான் பணிகள் தொடங்க முடியும் என்ற நிலை இருப்பதால் பல இடங்களில் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து ஆணையர்: “மாநகராட்சி பணிகள் தணிக்கையில் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் தொடங்காவிட்டால் அபராதம் விதித்து பணி உத்தரவு வழங்க கூறியுள்ளனர். ஜல்லி சாலை போட்டு 3 மாதம் ஆகியும் எல் அண்டு டி நிர்வாகம் பணி செய்யவில்லை. 12, 13-வது வார்டில் 10% பணிகள் கூட நடக்கவில்லை. 6-வது வார்டு நேதாஜி நகரில் ஒரு மாதமாகியும் குடிநீர் வடிகால் வாரிய துறையினர் பணி செய்யவில்லை” என்றார். தொடர்ந்து, ஆணையர்: “வேலூரில் அம்ருத் திட்டப் பணிகளை முடித்து 2021-ம் ஆண்டு முதல்வர் திறந்து வைத்தார். ஆனால், குடிநீர் தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக்கொள்ளவில்லை என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றார்.

துணை மேயர்: “பாதாள சாக்கடை திட்டம், அம்ருத் திட்டத்துக்கு தனித்தனி அதிகாரிகளை நியமித்து பணியை முடிக்க நடவடிக்கை எடுங்கள்” என்றார். ஆணையர்: “குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 20 அதிகாரிகளை விரைவில் நியமித்து அனைத்து குடிநீர் தொட்டிகளையும் ஆய்வு செய்து ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். இதுவரை 42 தொட்டிகளை நம்மிடம் ஒப்படைத்துள்ளனர். 25 தொட்டிகளை ஒப்படைக்க வேண்டியுள்ளது” என பதிலளித்தார்.

கவுன்சிலர் யூசுப் கான்: “வார்டு 34, 35, 36, 37, 38, 39-வது வார்டு மக்களுக்கான பில்டர்பெட் டேங்கில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள இரண்டு தொட்டிகளை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இரவு காவலரை நியமிப்பதுடன் பகல் நேரத்தில் காவல் துறையினர் ரோந்து செல்ல வேண்டும். எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருக்கும் தொட்டியில் பகல் நேரத்தில் யாராவது எதையாவது கலந்துவிட்டால் நாம்தான் கைகட்டி பதில் சொல்ல வேண்டும். பில்டர்பெட் டேங்கை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது” என்றார். ஆணையர் கூறியது: “பில்டர்பெட் தொட்டியை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி கோரி அனுப்பியுள்ளோம். இந்த தொட்டியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் இருக்கிறது” என தெரிவித்தார்.

கவுன்சிலர் அன்பு: “எம்.ஜி.ஆர் நகரில் தண்ணீர் தேங்கும் பிரச்சினையை மாவட்ட ஆட்சியர், ஆணையர் எல்லாம் பார்த்துச்சென்றும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. மழைக்காலம் தொடங்க உள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் வரும் சூழல் இருக்கிறது” என்றார். அதற்கு ஆணையர்: “அங்கு கால்வாய் கட்ட ரூ.1.8 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் பணி தொடங்கலாம்” என கூறினார். புஷ்பலதா: “வள்ளிமலை கூட்டுச்சாலை, சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் மழை பெய்தால் தண்ணீர் தேங்குகிறது. விருதம்பட்டில் கழிவுநீர் கால்வாய் திறந்துவிட்டதால் கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூற, அதற்கு ஆணையர்: “சித்தூர் பேருந்து நிலையத்தில் புதிய கால்வாய் கட்ட நான்கு கடைகள் பாதிக்கும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் கூறியுள்ளனர்” என விளக்கம் கொடுத்தார்.

கவுன்சிலர் தபசும் பர்வீன்: “40-வது வார்டில் கால்வாய் வாருவதற்கு 8 பேர் இருந்தனர். இப்போது, இருக்கும் 2 பேரில் ஒருவர் நோயாளி என்பதால் பணி செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் 4 பேராவது எனது வார்டுக்கு கொடுக்க வேண்டும்” என்றார். அதற்கு ஆணையர்: “உங்கள் வார்டில் கால்வாய் சீரமைக்க வந்த அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். கால்வாய் மீது ஸ்லாப் போட்டதை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேயர்: “மாநகராட்சியில் உள்ள அனைவரும் கால்வாய் மீது ஸ்லாப் போடுவதால் அடைப்பு ஏற்பட்டால் எப்படி தூர் வார முடியும்” என குறுக்கிட்டார்.

கவுன்சிலர் ரமேஷ்: “10-வது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் 4 மாதங்களாக சாலை மோசமாக இருக்கிறது. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பம்ப் ஆபரேட்டர்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கிறது” என தெரிவிக்க, அதற்கு பதிலளித்த ஆணையர்: “விஐடி முதல் வெள்ளக்கல்மேடு வரை சாலை பணியும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதல் காங்கேயநல்லூர் சர்ச் வரை சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை வசம் கொடுத்துவிட்டோம். இப்போது, கேஸ் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டுவதால் மீண்டும் தாமதமாகிறது” என்றார்.

மேயர் கூறும்போது: “மாநகராட்சியில் அனுமதி இல்லாமல் கேஸ் இணைப்புக்காக யாரும் பள்ளம் தோண்டுவதை அனுமதிக்கக்கூடாது” என்றார். ஆணையர்: “மாநகராட்சியில் 7 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கணக்கில் வராமல் இருக்கிறது. பில் கலெக்டர்கள் அந்த பணியை செய்வதில்லை. இதற்கெல்லாம் நாங்கள்தான் பதில் சொல்கிறோம்” என்றார். கவுன்சிலர் அருணா: “தெரு விளக்குகள் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இதுவரை கொடுக்கவில்லை” என கூற, அதற்கு பதிலளித்த அதிகாரி: “1,520 தெரு விளக்குகள் பொருத்த மின்வாரியத்துக்கு பணம் செலுத்திவிட்டோம். அவர்கள் ஆட்கள் பற்றாக்குறையால் தாமதம் செய்கின்றனர்” என்றார். இவ்வாறு நடைபெற்ற விவாதத்தில் மொத்தம் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE