மழையின் போது தொலைத் தொடர்பு சேவை பாதிக்காமல் இருக்க நடமாடும் செல்போன் கோபுரங்கள்: தென்காசி ஆட்சியர்

By த.அசோக் குமார்

தென்காசி: வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு சேவை தடையின்றி கிடைக்க ஏதுவாக நடமாடும் செல்போன் கோபுரங்களை அமைக்க தனியார் செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; ‘வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்துக்கும் தனித்தனியாக துணை ஆட்சியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிவாரண முகாம்களை அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வட்டத்திலும் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீர்வளத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு வட்ட அளவில் ஏற்படக்கூடிய பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் ஏற்படும்போது தடையின்றி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் கம்பம் மற்றும் மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டால் அதை மாற்ற 3,310 மின் கம்பங்களும், 185 மின் மாற்றிகளும் தயார் நிலையில் உள்ளன. தொலை தொடர்பு துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் நடத்தப்பட்டது. அலைபேசி தொடர்பு துண்டிக்கப்படாமல், நடமாடும் செல்போன் கோபுரம் அமைக்க தயார் நிலையில் இருக்குமாறும் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மழைநீரை வெளியேற்ற 250 பம்புகள், 70 பம்ப் செட் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மீட்பு பணிகளுக்காக 44 பொக்லைன்கள், 101 மரம் அறுக்கும் கருவிகள், 53 நீர் இறைப்பான்கள், 67 ஜெனரேட்டர்கள், 66 லாரிகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன.

வெள்ளப் பாதிப்புகளை தடுக்க 15,540 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மழை நீர் வடிந்த பின்பு மழை நீரை சுத்தம் செய்ய 48.26 டன் பிளிச்சிங் பவுடர், 10 டன் சுண்ணாம்பு தூள், பினாயில் ஆகியவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 9 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 208 துணை சுகாதார நிலையங்களில் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர் ஓடைகள் மற்றும் நீரோடைகள் சுத்தம் செய்யப்பட்டு நீர் தேங்காத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்களை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 40 நிவாரண முகாம்கள் அடிப்படை வசதிகளோடு தயார் நிலையில் உள்ளன. இதற்கான பொறுப்பு அலுவலர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள நீர்வள ஆதாரத்துறை மூலம் பொறியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு அணைக்கட்டு, ஆறு, குளங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE