தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் இருந்து கறம்பக்குடிக்கு கூடுதலாக அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி ஒரத்தநாடு அரசுக் கல்லூரி மாணவிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடியில் இருந்து ஒரத்தநாட்டில் உள்ள அரசு பெண்கள் கல்லூரிக்கு சுமார் 500க்கும் அதிகமான மாணவிகள் படிக்க வந்து செல்கின்றனர். இந்தக் கல்லூரியில் கடந்தாண்டு வரை 2 ஷிப்டாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. நிகழாண்டு முதல் ஒரே ஷிப்டாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கல்லூரி மாலை 3 மணிக்கு முடிந்து விடுவதால், அந்த நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாலை 5 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால், கல்லூரி முடியும் நேரத்துக்கு கூடுதலாக அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என கறம்பக்குடி வழித்தடத்தில் இருந்து வரும் மாணவிகள், ஒரத்தநாடு போக்குவரத்து பணிமனையில் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், இன்று ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் கறம்பக்குடிக்கு கூடுதலாக அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா மற்றும் அரசுப் போக்குவரத்து கழக வணிக மேலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கறம்பக்குடிக்கு கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
» தேனியில் பசுமையாக மாறிய மானாவாரி விளைநிலங்கள்: அடுத்தடுத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி