புதுச்சேரி: சாலைகளை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதி கொடாத்தூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லை. இங்கு தார் சாலை அமைக்கப்படாததால் ஒவ்வொரு மழைக்கும் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மழைக் காலம் வந்தால் இங்குள்ள சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன. இந்த நிலையில் புதுவையில் நேற்று பெய்த மழையின் காரணமாக, வழக்கம் போல சாலைகள் சேறும், சகதியுமாக மாறின.
இதைக் கண்டித்து கிராம மக்கள் விழுப்புரம் - புதுவை சாலை சந்திப்பில் இன்று மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
இதுதொடர்பாக அந்த மக்கள் கூறுகையில், "உள்துறை அமைச்சரின் தொகுதியான மண்ணடிப்பட்டு தொகுதியில் எங்களது கொடாத்தூர் கிராமம் மட்டும் தனிதீவாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இங்கு உள்ள சமுதாய நலக்கூடம், விவசாய நெல் களம் ஆகியவை பாழடைந்துள்ளது. இதனையும் சீரமைக்க வேண்டும்" என்றனர்.
» தேனியில் பசுமையாக மாறிய மானாவாரி விளைநிலங்கள்: அடுத்தடுத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
» திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைககு அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக 56 இடங்கள்!
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பொதுமக்கள் தார் சாலை அமைக்காமல், சிமென்ட் சாலை அமைத்தால் தான் நிரந்தர தீர்வு ஏற்படும் எனக் கூறினர். இதையேற்று ஆணையர் விரைவாக சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கிராம மக்களின் மறியல் போராட்டத்தால் புதுவை - விழுப்புரம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.