தேனியில் பசுமையாக மாறிய மானாவாரி விளைநிலங்கள்: அடுத்தடுத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மானாவாரி விளை நிலங்களில் விதைத்த பயிர்கள் துளிர்த்து வளர்ந்துள்ளன. இதனால் ‘வானம் பார்த்த விவசாயிகள்’ மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளை நிலங்களில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதேபோல் 18ம் கால்வாய், பிடிஆர் கால்வாய் திட்டங்களின் கீழ் கோம்பை, தேவாரம், சிலமலை, போடி, கோட்டூர், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இவை தவிர, ஆறு, கால்வாய் மற்றும் கண்மாய் பாசனத்தில் பயன்பெறாத மானாவாரி விளைநிலங்கள் மாவட்டத்தின் பல இடங்களில் உள்ளன.

குறிப்பாக, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மானாவாரி நிலங்கள் அதிகம். இப்பகுதிகளில் மழையை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. அதனால், கோடை மழை, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்களில் இப்பகுதிகளில் விதைப்பு நடைபெறும். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மானாவாரி நிலங்களை விவசாயிகள் உழுது பண்படுத்தினர். மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டதால் விதைப்பிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு லேசான மழைப் பொழிவு இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து மழையின் தீவிரம் அதிகரித்தது. இதனால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், எள், சோளம் உள்ளிட்டவை துளிர்ந்து வளரத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து மழைக்கான அறிவிப்புகளும், அறிகுறிகளும் நம்பிக்கை தருவதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “ஆண்டிபட்டியைப் பொறுத்தளவில் அனுப்பபட்டி, மறவபட்டி, அடைக்கம்பட்டி, கணேசபுரம், ஏத்தக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயமே அதிகம் நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பருவமழையை எதிர்ப்பார்த்து விதைத்தோம். சரியான நேரத்தில் மழை பெய்ததால் விதைகள் துளிர்விட்டு வளர்ந்துள்ளன.

இருப்பினும் அடுத்தடுத்த மழை பெய்தால் மட்டுமே பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் துளிர்த்த பயிர் கருகி விடும். இப்பகுதியில் மட்டுமின்றி, பால கிருஷ்ணாபுரம், கோபாலபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மானாவாரி பயிர்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளன” என்று விவசாயிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE