கனமழையால் நிரம்பி வழியும் பன்னிமடை தடுப்பணை!

By KU BUREAU

கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மலை அடிவார கிராமங்களான மாங்கரை, சின்னதடாகம், சோமையனூர், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சின்னதடாகம் பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின.

தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக பன்னிமடை தடுப்பணை நிறைந்து, கணுவாய் தடுப்பணை நோக்கி மழை நீர் செல்கிறது.

இதனிடையே, பன்னிமடை-கணுவாய் பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தில் மழை நீர் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் சின்னதடாகத்தை அடுத்த பொன்னூத்தம்மன் கோயில் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதுகுறித்து, கெளசிகா நீர்கரங்கள் கூட்டமைப்பின் நிறுவனர் செல்வராஜ் கூறும்போது, “கணுவாய் தடுப்பணைக்கு மழை நீர் வந்தால் கதவணை மூலம் ராஜவாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர் செல்லும்.

கணுவாய் தடுப்பணை முழுவதும் நிரம்பி வெளியேறும் மழை நீர் சங்கனூர் பள்ளம் வழியாக சிங்காநல்லூர் ஏரிக்கு செல்லும். கடந்த ஆண்டில் சின்னவேடம்பட்டி ஏரி 40 சதவீதம் வரை நிரம்பியது. இந்த ஆண்டில் நல்ல மழை பெய்யும் பட்சத்தில் சின்னவேடம்பட்டி ஏரி முழுவதும் நிரம்ப வாய்ப்புள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE