திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணைப்பாளையம் பகுதியிலுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கோவை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதன் எதிரொலியாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், திருப்பூர் ஆண்டிபாளையம் கல்லூரி சாலை பகுதிகளை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் நேற்று காலை நீரில் மூழ்கியது. இதையடுத்து, தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாதபடி போலீஸார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை கன மழை பெய்தது. திருப்பூர் வடக்கு பகுதியிலும் மழை பெய்தது. மாநகரில் ராயபுரம், ஷெரீப் காலனி, நொய்யல் வீதி, கரட்டாங்காடு, வீரபாண்டி, பாளையக்காடு, கோல்டன் நகர், காந்தி நகர், அனுப்பர்பாளையம் மற்றும் கருவம்பாளையம் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் கல்லூரி சாலையிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. பூங்கா சாலை நஞ்சப்பா பள்ளி அருகே மரம் சாய்ந்து விழுந்ததில், சுமார் 2 மணிநேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்பூர் வெள்ளியங்காடு அருகே முத்தையன் நகர், வீரபாண்டி காவல் நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
» ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா: காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமில்லை!
» தொடர் மழையால் விலை உயர்வு: சென்னைக்கு தக்காளியை விற்பனைக்கு அனுப்பும் ஓசூர் விவசாயிகள்
மழை பாதிப்பு மற்றும் உதவிக்கு மாவட்ட நிர்வாகத்தின் 0421-2971199 என்ற எண்ணுக்கும், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல், மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்க திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 0421-2321500 என்ற எண்ணுக்கும், 1800-425-7023 என்ற இலவச எண்ணுக்கும் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.