குன்னூரில் தொடரும் கனமழை: தடுப்புச் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் வீடு

By KU BUREAU

குன்னூர் / மேட்டுப்பாளையம்: குன்னூரில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால், பல்வேறு பகுதிகளில் மரங்கள், பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தடுப்புச் சுவர் இடிந்து அந்தரத்தில் வீடு தொங்குவதால், அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஓட்டுப்பட்டறை காமாட்சி அம்மன் கோயில் அருகே பஷீர் என்பவரின் வீட்டின் சுற்று தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து, அருகிலுள்ள குமார் என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள அறை பகுதியில் விழுந்தது. இதனால், அந்த வீடு எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இந்த வீட்டை வருவாய் துறையினர் ஆய்வு செய்து, பின்புறம் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அந்தரத்தில் வீடு தொங்குவதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். வண்டிச்சோலை அருகே மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்ட ம் குன்னூரில் பெய்த கனமழையால் ஓட்டுப்பட்டறை பகுதியில்
தடுப்புச் சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் காணப்படும் வீடு.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் மாநில நெடுஞ்சாலை, வனத்துறையினர் சென்று, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அளக்கரை செல்லும் சாலையில் ராட்சத பாறை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியிலும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

கேத்தி பகுதியில் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். இதேபோல், மேட்டுப்பாளையம் - உதகை வழித்தடத்தில் முதல் மற்றும் இரண்டாம் கொண்டை ஊசி வளைவு அருகே பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர், மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் இரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE