மழை பாதிப்புகளை அரசு கையாளும்: ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை

By KU BUREAU

மேட்டூர்: மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில், அனைத்திந்திய நெசவாளர்கள் நலச் சங்கம் சார்பில் சிறந்த நெசவாளர்களை கவுரவிக்கும் விழா நேற்று நடந்தது. சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். ஹம்பி ஹேமகூட மகா சமஸ்தான ஸ்ரீகாயத்ரிபீட பீடாதிபதி, தேவாங்ககுல ஜெகத்குரு மஹாராஜ் ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிஜி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி,சிறந்த நெசவாளர்கள் 100 பேருக்குவிருது வழங்கிப் பேசியதாவது: மனித நாகரிகத்தின் முதல் அடையாளம் ஆடை. எனவே, அனைவருக்கும் ஆடை அளிக்கும் நெசவாளர்கள் முக்கியமானவர்கள்.

ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து ஜவுளிப் பொருட்கள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ரோமப் பேரரசின் குறிப்பில் உள்ளது. பிரதமர் மோடி கைத்தறி நெசவாளர்களின் நலனில் அக்கறை காட்டி வருகிறார். இளைஞர்கள் நெசவுத் தொழிலுக்கு வருவதற்கு ஆர்வமில்லாமல் உள்ளனர். இந்நிலை மாற வேண்டும். பணத்தைநோக்கி மட்டும் செல்லாமல், நெசவுத் தொழிலில் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும். நெசவாளர்களின் கோரிக்கைகள் குறித்துமத்திய அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

பின்னர், ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில், தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் எனக் கருதுகிறேன். மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE