பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எச்சரிக்கையை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ச்சியாக 246 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடங்குவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல் சின்னத்தால் கன்னியாகுமரி உட்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.75 அடியாக இருந்த நிலையில் 564 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. 551 கன அடி தண்ணீர் வெளியேறிய நிலையில், உபரியாக 246 கனஅடி நீர் நேற்று மாலையில் இருந்து திறந்துவிடப்பட்டு தொடர்ச்சியாக வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 64.12 அடியாக உள்ளது.

பேச்சிப்பாறையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

அணைக்கு 285 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில், அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பேச்சிப்பாறை அணையில் மறுகால் திறக்கப்பட்டதால் ஆற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது. குறிப்பாக, குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் கனமழை பெய்தால் எந்நேரமும் அணையில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக வெளியேறி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவி கொட்டும் இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE