சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு பிரசவம் - மதுரை அரசு மருத்துவர்கள் சாதனை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரசவம் மேற்கொண்டனர். மிக அரிதாக நடந்த இந்த பிரசவத்தில் தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த தினேஷ்ராஜ் மனைவி சித்ரா. இவர், 2015ம் ஆண்டு முதல் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறுநீரகத் துறை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். 2018ம் ஆண்டு இவரது தாயாரின் சிறுநீரகம் சித்ராவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. அதன் பிறகு நோய் தடுப்பு மருந்துகளை எடுத்து வந்த நிலையில் சித்ரா கருவுற்றார். கடந்த அக்டோபர் 2ம் தேதி சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் தாயும், சேயும் வைக்கப்பட்டு பல்துறை நிபுணர்கள் வழிகாட்டுதலில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. கடந்த 10ம் தேதி சித்ராவும் குழந்தையும் நலமுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவருக்கு சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவர்கள், ஆலோசனை வழங்கிய சிறுநீரகப் பிரிவு மருத்துவர்களை டீன் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.

இதுகுறித்து இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் அருள் சுந்தரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு அரிதாகவே நடக்கிறது. அவர்கள் கர்ப்பகாலத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் வெற்றிகரமாக குழந்தை பெறுவது கடினம். 2020ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 ஆண்டுகளில் 204 பெண்கள் இளம் வயதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதில் 9 பெண்கள் மட்டுமே வெற்றிகரமாக மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தை பேறுடன் நலமாக இருக்கின்றனர்" என்று அருள் சுந்தரேஷ்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE