“ரெஸ்டோ பார்களை தொடர்ந்து புதுச்சேரியில் ஹவுஸ் பார்களை திறக்க அரசு திட்டம்” - நாராயணசாமி திடுக் தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ரெஸ்டோபார்களை தொடர்ந்து புதுச்சேரியில் ஹவுஸ் பார் என்ற திட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஹரியானா தேர்தலில் அனைத்து ஊடகங்களும் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவித்தனர். ஆனால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை இண்டியா கூட்டணிக்கு தந்திருக்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரத்துடன் கூறினர்.

ஆனாலும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முன்வரவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவாக இருப்பதே காரணம். ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றியை பாஜக தட்டிப்பறித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் முதல்வர் ஸ்டாலின் நிர்வாக இயந்திரத்தை முடுக்கி விட்டு தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறார். ஆனால், புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று தான் முதல்வர் பேரிடர் நீக்குத்துறையின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

சமீபத்தில் ஒரு மணி நேரம் மழை பெய்தபோது நகரமே அல்லோகலப்பட்டது. இப்போதாவது, மழை எச்சரிக்கையை தொடர்ந்து அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும். காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை போலி அரசாணை வெளியிட்டு அபகரிப்பு செய்துள்ளனர். இதில் 179 பட்டாக்கள் விநியோகம் செய்யப்பட்டு ரூ.30 கோடி வரைக்கும் மோசடி நடந்துள்ளது. துணை ஆட்சியர் ஜான்சன், நில அளவையர் ரேனுகா தேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த ஆனந்து மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை முதல்வர் ரங்கசாமி காப்பாற்ற நினைக்கிறார். முதல்வர் அலுவலகத்தில் உள்ள புரோக்கர்களும் அவருக்காக வரிந்துகட்டி செயல்படுகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும். அப்பாவி மக்கள் ஏமாந்த பணத்தை திரும்பப்பெற்றுத்தர வேண்டும். இந்த நில பதிவை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் நில மோசடி கும்பல் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டியிருக்கிறது.

புதுச்சேரியில் வேலையில்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். புதுச்சேரியில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதற்கு அப்போதைய ஆளுநர் தமிழிசையிடம் ஒப்புதல் பெறாமல் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.60 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டது. லஞ்சம் பெற்று புதிய மதுபான தொழிற்சாலைகளை அனுமதிப்பதாக சட்டப்பேரவையிலேயே பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் புகார் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் கொள்கை முடிவுக்கு துணை நிலை ஆளுநரிடம் அனுமதி பெறாமல், அனுமதி அளித்தது எப்படி என துணை நிலை ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தாலும், இந்த புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க முதல்வர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார். புதுச்சேரியில் ஏற்கெனவே ரெஸ்டோ பார்களால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் கேள்விக் குறியாக உள்ளது. இந்தநிலையில் முதல்வர் ரங்கசாமி விதவிதமாக சிந்தனை செய்கிறார். அடுத்ததாக ஹவுஸ் பார் என்ற திட்டத்தை கொண்டு வர அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளிலேயே பார்கள் அமைத்து, மது விற்பனை செய்யலாம். இது மட்டுமில்லாமல், வெள்ளி, சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் டிட் பிட்ஸ் என்ற புதிய வகை பாருக்கும் அனுமதி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 3 நாட்கள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் இந்த டிட் பிட்ஸ் பாரில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்படும். இதற்கெல்லாம் உரிமம் வழங்க தற்போது ஆலோசனைகள் நடந்து வருகிறது. புதுச்சேரியை மதுச்சேரியாக மாற்றிய முதல்வரை மக்கள் தூக்கியெறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை" என்று நாராயணசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE