டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு வழக்கில் மூத்த வழக்கறிஞர் குறித்த கருத்துக்கள் நீக்கம்

By கி.மகாராஜன்

மதுரை: டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு வழக்கின் உத்தரவில் மூத்த வழக்கறிஞர் வில்சன் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணை வீடியோ காட்சியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு வழக்கில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் காணொலியில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சனின் செயல்பாடு குறித்து நீதிபதி சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்தும் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் காணொலி விசாரணையின் வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் பரவியது. இதையடுத்து மூத்த வழக்கறிஞரிடம் நீதிபதி கன்னியக்குறைவாக நடந்து கொண்டதாகவும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு வழக்கின் உத்தரவில் மூத்த வழக்கறிஞர் குறித்து நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்கக் கோரியும், மேல்முறையீடு விசாரணையை இதே அமர்வு விசாரிக்கக் கோரியும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘மேல்முறையீடு மனு விசாரணையில் ரிட் மனுவில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதியை விலகுமாறு டிஎன்பிஎஸ்சி தரப்பில் கோரப்படவில்லை. ஆகவே, மேல்முறையீடு மனுக்களை இதே அமர்வு விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்ற காணொலி விசாரணை வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. டிஎன்பிஎஸ்சி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “மேல்முறையீடு வழக்கிலிருந்து தனி நீதிபதி விலக வேண்டும் என மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரவில்லை. அவர் நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். நீதித்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் வில்சன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்” என்றார்.

பின்னர் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “உயர் நீதிமன்றத்தின் காணொலி விசாரணை காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக உயர்நீதிமன்ற சைபர் கமிட்டி, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். காணொலி விசாரணை காட்சியை யார் பதிவு செய்தார் என்பது ஓரிரு நாளில் கண்டுபிடிக்கப்படும். சமூக வலை தளங்களில் நீதிமன்ற விசாரணை வீடியோ பதிவை உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவிலிருந்து மூத்த வழக்கறிஞர் வில்சன் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளையும் நீக்க உத்தரவிடப் பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு மனுக்களை வேறு அமர்வு விசாரணைக்கு அனுப்ப தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE