ரெட் அலர்ட் எச்சரிக்கை: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நாகை மீனவர்கள்

By கரு.முத்து

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3,500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காற்றின் வேகமானது 35 கி.மீ முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும். அதிகபட்சமாக 65 கி.மீ வரை காற்று வீசுவதுடன் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட நாகூர் பட்டினச்சேரி துவங்கி கோடியக்கரை வரை உள்ள சுமார் 30 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ஏற்கெனவே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3,500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE