சென்னை உட்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

By கி.கணேஷ்

சென்னை: அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகனமழை எச்சரிக்கையை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் (அத்தியாவசிய சேவை துறைகள் தவிர) அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மழையையொட்டி நிவாரண மையங்கள் மற்றும் மீட்புப் பணி அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி கனமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், செப்.30 மற்றும் அக்.14-ம் தேதிகளில் தலைமைச்செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

முதல்வர் உத்தரவின்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவு கனமழை பெய்த நிலையிலும், மயிலாப்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். தொடர்ந்து இன்று காலை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் மற்றும் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் தொடர்மழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை ஜெசிபி மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேசின் மேம்பாலத்திலிருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதையும் பார்வையிட்டார்.

அதன்பின், டிமெல்லோஸ் சாலையில், அதிகமாக மழைநீர் தேங்கும் இடங்களான கே.எம். கார்டன் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் சேரும் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். மேலும், தொடர்ந்து, புளியந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு பணி மேற்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, அருகிலிருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்துச் சென்று தேநீர் அருந்தினார்.

அதன்பின், பெரம்பூர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கும் மழைநீர் ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு சென்றடைவதை ஆய்வு செய்து, அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட்களை முதல்வர் வழங்கினார். ஆய்வின் போது, கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் 14-ம் தேதி வரை 10.52 செமீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 68 சதவீதம் கூடுதலாகும்.

மழை காரணமாக, நாமக்கல்லில் ஒரு நிவாரண முகாமில், 32 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையை முன்னிட்டு, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 85 லட்சம் கைபேசிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 444 வீரர்களைக் கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 10 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் 89 மீட்புப் படகுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5,147 மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாநிலம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களாக 37 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி பகுதிக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணி அலுவலர்களும், 6 மாவட்ட வருவாய் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நாளை சென்னை அக்.16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், எம்ஆர்டிஎஸ், ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

நாளை அக்.16ம் தேதி மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE