உதகையில் பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் இயங்கி வரும் பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளிக்கு இன்று இரண்டாவது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் அப்பள்ளி வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முத்தோரை பகுதியில் இயங்கி வருகிறது பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளி. இப்பள்ளியில் தமிழக மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உட்பட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு விரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது. இந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக இன்றும் அந்தப் பள்ளிக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE