குன்னூர்: குன்னூரில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எடப்பள்ளி, காட்டேரி அருவங்காடு, வெலிங்டன் உட்பட பல்வேறு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
குன்னூர் வண்டிச்சோலை அருகே மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மரங்களை அப்புறப்படுத்தினர்.
» சிங்கம்புணரி: பெண்ணின் காதுகளை அறுத்து நகை கொள்ளை- ஒரே வீட்டில் 2வது முறை கொள்ளையர்கள் கைவரிசை
» கனமழை: இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இதேபோல் அளக்கரை செல்லும் சாலையில் ராட்சத பாறை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி உதவியுடன் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று கேத்தி பகுதியிலும் சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர்.