ஆதிதிராவிடர் நலத்துறையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

By KU BUREAU

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. மத்திய அரசின்நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது என்று அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறையில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமிகுற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மதிவேந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தில் (தாட்கோ) மேலாளர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாகஉள்ளன. இந்நிலையில், நிர்வாக நலன் கருதி 11 மாவட்ட மேலாளர்கள், 6 உதவி மேலாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு ரூ.100 கோடி அளவுக்கு மானியத்தொகை விடுவிக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான கடனுதவி விண்ணப்பங்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,தொழில்நுட்ப பிரிவில் காலியாகஉள்ள 10 உதவி செயற்பொறியாளர், 80 உதவி பொறியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கும் நோக்கில்அமுத சுரபி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விதிகளின்படி தேர்வுசெய்யப்பட்ட நிறுவனத்துக்கு பணி வழங்கப்பட்டது.

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில்காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளுக்கு மேலாக விடுதிகாப்பாளர்களாக பணியாற்றுவோரை அரசு விதிகளின்படி மாற்றம் செய்ய கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரிவிடுதிகளில் பயோ-மெட்ரிக், கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு வசதி இருப்பதால் வெளியாட்கள் யாரும் முறைகேடாக தங்க வாய்ப்பில்லை.

மத்திய அரசால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு வழங்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் பிஎம்ஏஜிஒய் திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கிய ரூ.186 கோடியும்,எஸ்சி-அருந்ததியர் நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூ.61 கோடியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், பழங்குடியினர் மேம்பாட்டு வசதிக்காக தொடங்கப்பட்ட' தொல்குடி' திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது முற்றிலும் தவறான செய்தி.

சமூக நீதியை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் திமுக அரசு, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை அனைத்து நிலைகளிலும் உயர்வடைய செயவதற்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE