கோவையில் ரூ.300 கோடியில் பிரம்மாண்ட நூலகம், அறிவியல் மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல்

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அருகே சுமார் 7 ஏக்கரில் பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்ட ரூ.300 கோடிக்கு நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே பெரிய நூலகமாக கட்டப்பட்டு மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து சர்வதேச தரத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் மதுரையில் ரூ.215 கோடி மதிப்பில் 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ திறக்கப்பட்டது.

இந்நிலையில் கல்வி, மருத்துவத்துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வரும் கோவை நகரில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 2024 - 2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. செம்மொழி பூங்கா அருகே ‘பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ அமைக்க 7 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நூலகம் ரூ.300 கோடியில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட நூலகம் கட்டி முடிக்க நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.245 கோடியில் கட்டுமான பணிகளும், ரூ.50 கோடியில் புத்தகங்கள் மற்றும் இணைய வசதிகளும், ரூ.5 கோடியில் கம்ப்யூட்டர்கள், படிப்பதற்கு உரிய உபகரணங்கள் ஆகியவை என மொத்தம் ரூ.300 கோடியில் பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்ட நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் மையத்தில் பல்வேறு பொறியியல் துறை, வானியல், ரோபோடிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளது. வரும் 2026 ஜனவரியில் கோவையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ள நிலையில், நூலகம்மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE