பஹ்ரைன் சிறையிலுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி இடிந்தகரை, விஜயாபதியை சேர்ந்த குடும்பத்தினர் கண்ணீருடன் மனு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: பஹ்ரைனில் சிறையில் உள்ள 28 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இடிந்தகரை, வியாபதியிலுள்ள அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் கண்ணீருடன் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப்போது இடிந்தகரை, விஜயாபதியைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினர் அளித்த மனுவில்: "எங்கள் குடும்பங்களை சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி பஹ்ரைன் கடலோர காவல் படையினரால் எல்லை மீறி மீன்பிடித்ததாக அவர்களை சிறை பிடித்து சென்று விட்டனர். தற்போது 28 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இதுவரையில் பிணை கிடைக்கவில்லை. வரும் 24ம் தேதி 28 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களுக்கு பிணை கிடைக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 28 மீனவர்களும் தற்போது சிறையில் உள்ளதால் நாங்கள் வறுமையால் வாடி வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர், அதன் தலைவர் மோகன் தலைமையில் அளித்த மனுவில்: "திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவி குழுக்கள் மூலம் 523 தூய்மைப் பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்களும் தின கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு தற்போது தின கூலியாக ரூ.480 வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் செயல்முறை ஆணைப்படி 2024 -25ம் ஆண்டிற்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு தற்போது பெற்று வரும் ரூ.480 என்பதில் இருந்து ரூ.40 உயர்த்தி ரூ.520 ஆக ஊதியம் வழங்க வேண்டும். இந்த உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகராட்சியில் தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு தங்களின் உத்தரவுப்படி தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த காலங்களில் தூய்மை தொழிலாளர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சியில் தீபாவளி போனஸ் எதுவும் வழங்கப்படுவதில்லை.

இதற்கு மாறாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தீபாவளிக்கு முன்பாக அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் வழங்குவது வழக்கம். எனவே ஊதிய உயர்வையும் கடந்த ஏப்ரல் 1 முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகையையும் அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் அளித்த மனுவில், தன்மீது பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்தும் மானூர் காவல்துறை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சுப்பம்மாள் (80) அளித்த மனுவில், வயது முதிர்வு காரணமாக எனது மகன் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கி வருகிறேன். இந்த நிலையில் எனது குடும்ப அட்டையை ரத்து செய்ததால் அதை புதுப்பிப்பதற்காக கடந்த செப்டம்பர் 23ம் தேதி மனு அளித்திருந்தேன். ஆனால் கடந்த 13ம் தேதி எனக்கு ரேஷன் கார்டு நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. நான் உயிரோடு தான் இருக்கிறேன். ரேஷன் மூலம் கிடைக்கும் பொருள்களை வைத்து தான் எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனவே தயவு செய்து குடும்ப அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதியோர் அவதி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடந்த காலங்களில் பல்வேறு பணிகளுக்காக வரும் முதியவர்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கொக்கிரகுளம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில வாரங்களாக பேட்டரி வாகனம் இயக்கப்படவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த மூதாட்டி சுப்பம்மாள் நடக்க முடியாததால், உறவினர்கள் கை தாங்கலாக ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE