மதுரை: மதுரை அருகே சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் ஒரு தரப்பினர் மதுரை ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகிலுள்ளது எஸ்.பெருமாள்பட்டி. இங்குள்ள துருசுமலை அய்யனார் கோயிலில் இவ்வாண்டுக்கான புரட்டாசி உற்சவ விழா 7ம் தேதி முடிந்தது. இவ்விழாவின்போது, சுவாமி ஆடுதல் , கோயிலுக்குள் வழிபாடு , நேர்த்திக்கடன் செலுத்தவிடாமலும் மாற்று சமூகத்தினர் தடுத்ததாக எஸ்.பெருமாள்பட்டி, கீழநாச்சிகுளம் கிராமங்களைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தினர் , தமிழ்புலிகள் கட்சியினர் மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று திரண்டனர். அவர்கள் ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழிபாடு நடத்தவிடாமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், வருவாய் அலுவலரிடம் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில் கோயிலில் சாமி கும்பிட அனுமதித்து, பாதுகாப்பு அளிக்கவேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். இப்போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி பேரறிவாளன் உள்ளிட்ட போராட்டாக்காரர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘துருசுமலை அய்யனார் கோயில் அருந்ததியினர் சமூகத்தினருக்கு சொந்தமானது. இக்கோயில் விழாவின்போது, அருந்ததியினர் சமூகத்தினரை வழிபடவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். இன்று (அக்.,15) கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட அங்களை அனுமதிப்பதோடு, உரிய பாதுகாப்பும் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’ என்றனர்.
» தீபாவளி போனஸ்: கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
» போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவன நிலங்கள் விற்பனை: 16 பேர் மீது வழக்கு - மூவர் கைது