சேலம்: டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு இன்று 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதேசமயம் அணைக்கு வரும் நீரின் அளவு 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கடந்த ஜூலை 28ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கான காவிரி நீரின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து, நேற்று மாலையில் 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இது இன்று காலை முதல் 3 ஆயிரம் கன அடியாக மேலும் குறைக்கப்பட்டது.
இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 6 ஆயிரத்து 445 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று விநாடிக்கு 17 ஆயிரத்து 596 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுவது தொடர்கிறது.
இதனிடையே, பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில், அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று 89.26 அடியாக இருந்த நிலையில், இன்று 89.92 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 51.81 டிஎம்சி-யில் இருந்து, இன்று 52.55 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது.
» ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்க செய்ய வலியுறுத்தல்: மாம்பாக்கம் கிராம மக்கள் முற்றுகை
» தீபாவளி போனஸ்: கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்