ராமநாதபுரம்: அரசு விதிமுறைகளை மீறி மீன்பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ராமநாதபுரத்தில் மீனவர்கள் சங்கு ஊதி ஊர்வலமாகச் சென்று ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழமுந்தல், மேலமுந்தல் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் இன்று (அக்.14) ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது மீனவர்கள் தங்கள் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடிப்பு, ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிப்பு மற்றும் விசைப் படகுகள் கரையோர மீன்பிடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையை கண்டித்து, சங்கு ஊதியவாறு ஊர்வலமாகச் சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
ஆனால், கேணிக்கரை போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, 10 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மீன்வளத்துறைக்கு ரோந்துப் படகு தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தப் படகு வந்ததும் அதன் மூலம், விதிமுறைகளை மீறி மீன்பிடிக்கும் அனைத்து மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
» தீபாவளி போனஸ்: கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
» சாலையோர தள்ளுவண்டிகள் அகற்றம்: உளுந்தூர்பேட்டையில் பெண்கள் சாலை மறியல்
இதுகுறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறுகையில், “மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பராம்பரிய முறையில் தொழில் செய்யும் நாட்டுப் படகு மீனவர்கள் மற்றும் சிறு தொழில் மீனவர்களின் தொழில் முறைக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கீழமுந்தல் கிராமத்தில் 13 படகுகளும், தூத்துக்குடி, வேம்பார் பகுதிகளைச் சேர்ந்த சில படகுகளும் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தி மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு விதியை மீறி மீன்பிடிக்கின்றனர். மேலும், கீழமுந்தலைச் சேர்ந்த 15 படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர்.
மேலும், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் இப்பகுதியில் கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடுவதால் நாட்டுப் படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் இன்று சங்கு ஊதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டத்தை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாகச் சென்று கோரிக்கை வைப்போம்" என்று கருணாமூர்த்தி கூறினார்.