திருப்போரூர்: ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்க செய்ய வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தை மாம்பாக்கம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக வீராசாமி என்பவர் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மீது வந்த புகார்களின் அடிப்படையில் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவுக்கு தடை பெற்றார். இந்நிலையில் துணைத் தலைவர் உள்ளிட்ட 6 வார்டு உறுப்பினர்கள், தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டுமென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வண்டலூர் வட்டாட்சியருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
» சாலையோர தள்ளுவண்டிகள் அகற்றம்: உளுந்தூர்பேட்டையில் பெண்கள் சாலை மறியல்
» காட்டுமன்னார்கோவில் அருகே மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது
இதையடுத்து வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா தலைமையில் கடந்த 9-ம் தேதி மாம்பாக்கம் ஊராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி 6 வார்டு உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வழங்கினர். இதையறிந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் வந்து திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று காலை, மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் இந்த செயலைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் சிவ கலைச்செல்வன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முற்றுகையில் இருந்தவர்கள் வைத்தனர்.
மேலும் அவர்கள் மனு ஒன்றையும் அவர்கள் வழங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஒன்றிய ஆணையாளர் சிவகலைச்செல்வன் அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.