கல்பாக்கம்: சதுரங்கப்பட்டினம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஆழ்கடல் பகுதியில் வலையில் சிக்கித் தவித்த ஆமையை விடுவித்து மீண்டும் கடலில் விட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், ராகுல் மற்றும் ராமராஜ் ஆகிய மீனவர்கள் நேற்று மீன் பிடிப்பதற்காக படகில் கடலுக்குள் சென்றனர்.
கரையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் ஆமை ஒன்று வலையில் சிக்கி நீந்த முடியாமல் நீண்ட நாட்களாக மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர். உடனே, அந்த ஆமையை மீட்டு படகுக்கு கொண்டுவந்தனர். பின்னர், அதன் கால்களில் சிக்கியிருந்த வலையை கவனமாக அறுத்து விடுவித்தனர். மேலும், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் தண்ணீரில் மிதந்ததால் அதன் ஓட்டின் மீது படிந்திருந்த பாசியை அகற்றினர்.
பின்னர், ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டனர். வலையிலிருந்து மீண்ட ஆமை கடலுக்கு சென்றவுடன் மின்னல் வேகத்தில் நீந்தி மறைந்தது. ஆமையை மீனவர்கள் மீட்ட வீடியோ காட்சி சமுக வலைத்தளங்களில் பரவியதால் அனைவரும் மீனவர்களைப் பாராட்டி வருகின்றனர்.ஆழ்கடலில் வலையில் சிக்கித் தவித்த ஆமையை மீட்கும் சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்.