கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான ஆலோசனை கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதற்கு பொரங்காடு சீமை, 19 ஊர் தலைவர் ராமா கவுடர் தலைமை வகித்தார். பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம தலைவர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்த கிராமபுறங்களை சார்ந்து வாழ்ந்து வருகிறோம். தங்களது வாழ்வாதாரம் கிராமங்களை சார்ந்துள்ளது. கோத்தகிரி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்சத்தில், சொத்துவரி உட்பட அனைத்து வரிகளும் உயரும். இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாக நேரிடும்.
எனவே, நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோத்தகிரி பேரூராட்சியை தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டது.