காரியாபட்டியில் ரூ.2.11 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகம் திறப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: காரியாபட்டியில் ரூ.2.11 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு ஆகியோர் இன்று திறந்துவைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் பேரூராட்சிகள் துறை சார்பில் பேருந்து நிலையத்தில் ரூ.2.11 கோடி மதிப்பில் புதிதாக வணிக வளாகம் மற்றும் கலைஞர் அலங்கார வளைவு திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்), அசோகன் (சிவகாசி), சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு ரூ.1.68 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடங்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அலங்கார வளைவு, பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடைகள், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் என மொத்தம் ரூ.2.11 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய கட்டுமனங்களை அமைச்சர்கள் திறந்துவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழக அரசு நகராட்சி நிர்வாகத்துறைக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடி என ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் ரூ.20 கோடி முதல் 25 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிக நிதிகளை வழங்கி திட்ட பணிகளை மேற்கொள்வதால் தான், இந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள 25 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடிகிறது.

திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு தமிழகத்தில் சுமார் 4.26 கோடி மக்களுக்குத்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டு காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ஏறத்தாழ ரூ.30 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு, கூடுதலாக 3 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 1.25 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்படுகிறது.

மீதமுள்ள சுமார் 1.75 கோடி மக்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டங்கள் சென்னையில் உருவாகி வருவதாகக் கூறினார். அமைச்சர் தங்கம்தென்னரசு பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக சுமார் ரூ.75 கோடி அளவிற்கு வைகையிலிருந்து காரியாபட்டி பேரூராட்சிகளுக்கு தண்ணீர் தருவதற்கு ஒரு புதிய திட்டம் இந்த ஆண்டு அரசு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைகையிலிருந்து நிலையூர், கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE