கடலூர் திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் ஏடு படிக்கும் நிகழ்வு: கல்வியை தொடங்கிய குழந்தைகள்!

By க. ரமேஷ்

கடலூர்; கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலின் மலைப்பகுதியில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் ஏடு படிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு அ,ஆ என குழந்தைகள் எழுதி கல்வியை தொடங்கினர்.

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி புதுவை, ஆந்திரா,கர்நாடக மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள். பலர் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தி செல்வார்கள்.

இந்த நிலையில் இன்று(அக்.12) விஜயதசமி விழாவை முன்னிட்டு கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.அதன்படி இன்று(அக்.12) திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பின்னர் ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ, ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE